சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ஒருநாள் ஆட்டம் ரத்து + "||" + Cincinnati Tennis: Djokovic, Azarenka advance to semifinals - One day game cancelled supporting anti-racism protest
சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக ஒருநாள் ஆட்டம் ரத்து
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேறினர். இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்றைய ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
நியூயார்க்,
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லெனார்ட் ஸ்ருப்பை ஊதித் தள்ளினார். நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 21-வது வெற்றியை ருசித்த ஜோகோவிச் 8-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக முறை அரைஇறுதியை எட்டிய வீரர்களின் சாதனையை அவர் சமன் செய்தார்.
அரைஇறுதியில் ஜோகோவிச், 12-ம் நிலை வீரரான பாவ்டிஸ்டா அகுட்டை (ஸ்பெயின்) சந்திக்கிறார். கால்இறுதியில் பாவ்டிஸ்டா அகுட் முதல் செட்டை இழந்தாலும் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்து 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் டேனில் மெட்விடேவை (ரஷியா) வெளியேற்றினார். மிலோஸ் ராவ்னிக் (கனடா), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில், இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜப்பான் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் கோன்டாவிட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் பெல்ஜியம் வீராங்கனை எலிசி மெர்டென்சை சந்திக்க இருந்த நவோமி ஒசாகா கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்ட இனவெறி சம்பவத்தை கண்டித்து சின்சினாட்டி தொடரில் இருந்து அதிரடியாக விலகினார். ஒரு கருப்பின பெண் என்ற வகையில் தனது எதிர்ப்பை காட்டுவதாக அவர் கூறினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிரை விரட்டியடித்து அரைஇறுதி சுற்றை அடைந்தார்.
அமெரிக்காவில் அரங்கேறும் இன பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஒட்டு மொத்த டென்னிஸ் உலகமும் ஆதரவு அளிப்பதை உணர்த்தும் வகையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனங்கள் (ஏ.டி.பி., டபிள்யூ.டி.ஏ.) சார்பில் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் நேற்று நடக்க இருந்த அனைத்து ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. போட்டி இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.