டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி - இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி + "||" + US Open Tennis: Serena Williams qualifies for 3rd round - India's Sumit Nagal loses

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி - இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி - இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி கண்டு வெளியேறினார்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய சுமித் நாகல், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார்.


1 மணி 59 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 124-வது இடத்தில் இருக்கும் சுமித் நாகல் 3-6, 3-6, 2-6 என்ற நேர்செட்டில் டொமினிக் திம்மிடம் வீழ்ந்து வெளியேறினார். இந்த வெற்றி டொமினிக் திம்முக்கு 27-வது பிறந்தநாள் பரிசாக அமைந்தது. 3-வது சுற்றில் டொமினிக் திம், 2014-ம் ஆண்டு சாம்பியனான மரிச் சிலிச்சை (குரோஷியா) சந்திக்கிறார்.

மற்ற ஆட்டங்களில் டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஆந்த்ரே ருப்லிவ் (ரஷியா), பெரேட்டினி (இத்தாலி), கரென் கச்சனோவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர். அதேநேரத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், பல்கேரியாவின் டிமிட்ரோவ் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வியை தழுவி நடையை கட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ரஷிய வீராங்கனை மார்கரிடா காஸ்பர்யனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 33 நிமிடமே தேவைப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டவரும், 2017-ம் ஆண்டு சாம்பியனுமான ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மல்லுக்கட்டுகிறார். இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 7-வது முறையாகும். இதுவரையில் செரீனா அவருடன் 6 ஆட்டங்களில் மோதி 5-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்து இருக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசை தோற்கடித்தார். அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா), விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), மரியா சக்காரி (கிரீஸ்), அலிஸ் கோர்னெட் (பிரான்ஸ்) ஆகியோரும் தங்களது தடையை தாண்டி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

ஆனால் முன்னணி வீராங்கனைகளான சபலென்கா (பெலாரஸ்), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.