டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம் + "||" + US Open Tennis: Serena, Dominic Thiem in 4th round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் செரீனா, டொமினிக் திம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடியும் அசத்தியது.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-2, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சை (குரோஷியா) சாய்த்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் வாசெக் போஸ்பிசில் 11-ம் நிலை வீரர் பாவ்டிஸ்டா அகுட்டுக்கு (ஸ்பெயின்) 7-5, 2-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி அளித்தார்.


டேனில் மெட்விடேவ் (ரஷியா), பெரேட்டினி (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் ஆஜெர் அலியாசிம் (கனடா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் கூட்டணி 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்- ஆன்ட்ரியாஸ் மீஸ் இணையை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஆட்டம் 1 மணி 47 நிமிடங்கள் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவரான 2017-ம் ஆண்டு சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த செரீனா பிறகு சுதாரித்து ஆக்ரோஷமாக விளையாடி சரிவில் இருந்து மீண்டார். 12 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவருக்கு உதவிகரமாக இருந்தது. முடிவில் செரீனா 2-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்சை தோற்கடித்து 18-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். செரீனா அடுத்து கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை சந்திக்கிறார்.

இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-6 (4), 6-4 என்ற நேர் செட்டில் ஆன்ஸ் ஜாபெரை (துனியா) வெளியேற்றி முதல்முறையாக 4-வது சுற்றில் கால் பதித்தார். அஸரென்கா (பெலாரஸ்), கார்னெட் (பிரான்ஸ்), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), பிரோன்கோவா (பல்கேரியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.