பந்தை நடுவர் மீது அடித்த விவகாரம்: ஜோகோவிச் மன்னிப்பு கேட்டார்


பந்தை நடுவர் மீது அடித்த விவகாரம்: ஜோகோவிச் மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 8 Sep 2020 12:07 AM GMT (Updated: 8 Sep 2020 12:07 AM GMT)

பந்தை நடுவர் மீது அடித்த விவகாரம் தொடர்பாக, ‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

நியூயார்க், 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் கோகோவிச் அதிருப்தியில் பந்தை நடுவர் மீது அடித்ததால் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தில் இருப்பவரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் கோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளி எடுத்தனர். தனது செர்வ்வில் கேம் புள்ளியை இழந்த ஜோகோவிச் 5-6 என்ற கணக்கில் பின்தங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் தான் வைத்து இருந்த பந்தை மட்டையால் பின்னோக்கி அடித்தார். அது லைன் பெண் நடுவரின் தொண்டையில் தாக்கியது. நடுவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போட்டி நடுவர், மைதான நடுவர், கிராண்ட்ஸ்லாம் போட்டி கண்காணிப்பாளர் ஆகியோர் நடந்த சம்பவம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அவர்களிடம் ஜோகோவிச் தான் வேண்டுமென்றே பந்தை அடிக்கவில்லை என்று விளக்கம் அளித்ததுடன் வருத்தமும் தெரிவித்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி விதிமுறைப்படி வீரர் ஒருவர் பந்தை வேண்டுமென்றே பொறுப்பற்ற முறையிலோ, அலட்சியமாகவோ மைதானத்துக்குள் அடிப்பது தவறாகும். இந்த விதிமுறையை மீறிய ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக 10 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த ஆலோசனைக்கு பிறகு போட்டி நடுவர் அறிவித்தார். இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜோகோவிச் விரக்தியுடன் நடையை கட்டினார். அவரை எதிர்த்து ஆடிய பாப்லோ காரெனோ பஸ்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால்இறுதிக்கு முன்னேறினார்.

காயம் காரணமாக ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), கொரோனா அச்சத்தால் நடப்பு சாம்பியன் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) இந்த போட்டியில் இருந்து விலகி விட்டதால் ஜோகோவிச் 4-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வதுடன், 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்தை எளிதில் சூடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரது கோபம் அந்த கனவை கணநொடியில் கலைத்து விட்டது. அத்துடன் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 26 ஆட்டங்களில் வெற்றியை சுவைத்த அவரது வீறுநடையும் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த போட்டியின் மூலம் அவர் ஈட்டிய தரவரிசை புள்ளிகள் மற்றும் பரிசுத்தொகை ஆகியவற்றையும் அவர் இழக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதுபோல் வீரர் தகுதி இழப்பு செய்யப்படுவது இது முதல்முறையல்ல. 1995-ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியில் இங்கிலாந்து வீரர் டிம் ஹென்மன் மைதான பணிப்பெண் மீது பந்தை அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த போட்டி தொடரில் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற வீரர்கள் யாரும் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த போட்டியில் யார் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் அவர் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியவர் என்ற பெருமையை பெறுவார். 2014-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் (குரோஷிய வீரர் மரின் சிலிச் சாம்பியன்) போட்டிக்கு பிறகு புதிய வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அலங்கரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-2, 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் டேவிடோவிச் போகினாவை ஊதித்தள்ளி கால்இறுதிக்குள் கால் பதித்தார். இதன் மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் காலிறுதியை எட்டிய முதல் ஜெர்மனி வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் குரோஷிய வீரர் போர்னா கோரிச் 7-5, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் போர்னா கோரிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ் 6-7 (0-7), 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினுக்கு அதிர்ச்சி அளித்தார். கால்இறுதியில் டெனிஸ் ஷபோவலோவ், ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவிட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து 2-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-7 (5-7), 6-3, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்.

மற்ற ஆட்டங்களில் கஜகஸ்தான் வீராங்கனை புதின்சேவா 6-3, 2-6, 6-4 என்ற செட்கணக்கில் பெட்ரா மார்டிச்சையும் (குரோஷியா), அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-1, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரையும் (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதியை எட்டினார்கள்.

ஜோகோவிச் மன்னிப்பு கேட்டார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவர் மீது பந்தை அடித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 33 வயதான செர்பிய வீரர் ஜோகோவிச் நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில், ‘இந்த ஒட்டுமொத்த சூழ்நிலையும் என்னை வருத்தமடைய வைத்து இருப்பதுடன் வெறுமையாகவும் ஆக்கிவிட்டது. நான் ஏதேச்சையாக தான் பந்தை அடித்தேன். நடுவர் மீது பந்து பட்டதும் ஓடிச்சென்று அவரை பார்த்தேன். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அறிந்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னேன். அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த தகுதி நீக்கத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு ஒரு வீரராகவும், மனிதனாகவும் என்னை மேம்படுத்தி கொள்ள முயற்சிப்பேன். களத்தில் நான் நடந்து கொண்ட விதத்துக்காக போட்டி அமைப்பு குழுவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அவரை எதிர்த்து விளையாடிய 29 வயது பாப்லோ காரெனோ பஸ்டாவிடம் கருத்து கேட்ட போது, ‘விதிமுறை என்பது எல்லோருக்கும் ஒன்று தான். போட்டி நடுவரும், கிராண்ட்ஸ்லாம் கண்காணிப்பாளரும் சரியான முடிவை எடுத்துள்ளனர். ஆனால் இதுபோன்று நடவடிக்கை எடுப்பது எளிதான காரியம் அல்ல’ என்றார்.

Next Story