அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நவோமி ஒசாகா
x
தினத்தந்தி 9 Sep 2020 11:48 PM GMT (Updated: 9 Sep 2020 11:48 PM GMT)

அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 32-வது இடத்தில் உள்ள போர்னா கோரிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடக்கத்தில் திணறியதுடன், சில தவறுகளையும் இழைத்தார். இதனால் முதல் செட்டை எளிதில் இழந்ததுடன், 2-வது செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கினார். பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 2-வது செட்டை டைபிரேக்கரில் கைப்பற்றியதுடன், அடுத்த செட்டையும் டைபிரேக்கர் வரை போராடி சொந்தமாக்கினார். 3 மணி 25 நிமிடம் நடந்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 1-6, 7-6 (7-5), 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் போர்னா கோரிச்சை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். அவரது இந்த வெற்றிக்கு 18 ஏஸ் சர்வீஸ்களும் கைகொடுத்தது.

மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா 3-6, 7-6 (7-5), 7-6 (7-4), 0-6, 6-3 என்ற செட் கணக்கில் 4 மணி 8 நிமிடங்கள் மல்லுகட்டி கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை சாய்த்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதே போல் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி சந்திக்கின்றனர்.


Next Story