அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Sep 2020 11:24 PM GMT (Updated: 11 Sep 2020 11:24 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 11-வது நாளில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 31 வயது விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.

முதல் செட்டில் ஒரு கேமை மட்டுமே பறிகொடுத்த செரீனா அந்த செட்டை 34 நிமிடத்தில் தனதாக்கினார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து கொண்டு செயல்பட்ட அஸரென்கா தனது வலுவான ஆட்டத்தின் மூலம் செரீனாவுக்கு பதிலடி கொடுத்து 2-வது செட்டை கைப்பற்றினார். வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது செட்டின் போது செரீனா இடது கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டதுடன், மைதானத்தில் சிகிச்சை பெற்று தொடர்ந்து ஆடினார். இருப்பினும் அவரால் சரிவில் இருந்து எழுச்சி பெற முடியவில்லை.

1 மணி 56 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஸரென்கா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு 3-வது முறையாக முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவரான அஸரென்கா 2013-ம் ஆண்டு அமெரிக்க ஓபனுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும். அந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனாவிடம் வீழ்ந்து இருந்தார். அதற்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்துள்ளார்.

24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று மார்கரெட் கோர்ட்டின் (ஆஸ்திரேலியா) சாதனையை சமன் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் செரீனாவின் கனவு அரைஇறுதியுடன் தகர்ந்து போனது. 2017-ம் ஆண்டு குழந்தை பெற்றுக்கொண்ட 38 வயதான செரீனா அதன் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2018-ம் ஆண்டு சாம்பியனுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 7-6 (7-1), 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை சாய்த்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 8 நிமிடம் நீடித்தது.இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மகுடத்துக்கான இறுதிஆட்டத்தில் நவோமி ஒசாகா-விக்டோரியா அஸரென்கா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் மேட் பாவிச் (குரோஷியா)-புருனோ சோரர்ஸ் (பிரேசில்) ஜோடி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)- நிகோலா மெக்டிச் (குரோஷியா) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Next Story