டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக்-ஸ்வெரேவ் + "||" + US Open Tennis: Dominic-Sverev in the final

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக்-ஸ்வெரேவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  இறுதிப்போட்டியில் டொமினிக்-ஸ்வெரேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.
நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம், 5-வது இடத்தில் உள்ள டேனில் மெட்விடேவை (ரஷியா) சந்தித்தார்.

2 மணி 56 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 6-2, 7-6 (9-7), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் கடந்த ஆண்டு (2019) 2-வது இடம் பிடித்த டேனில் மெட்விடேவை வீழ்த்தி 4-வது முறையாக ‘கிராண்ட்ஸ்லாம்’ இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் பிரெஞ்ச் ஓபனில் 2 முறையும், ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு தடவையும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 27-வது இடத்தில் இருக்கும் பாப்லோ காரெனோ பஸ்டாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நம்பிக்கையுடன் போராடி அடுத்த 3 செட்களையும் தனதாக்கினார். அதிக முறை தவறு இழைத்தாலும் 24 ஏஸ் சர்வீஸ்கள் அலெக்சாண்டர் சரிவில் இருந்து மீண்டு வர உதவியது.

3 மணி 23 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் காரெனோ பஸ்டாவை சாய்த்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் 2003-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிசுற்றை எட்டிய முதல் ஜெர்மனி வீரர் என்ற சிறப்பையும் 23 வயதான ஸ்வெரேவ் பெற்றார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-டொமினிக் திம் பலப்பரீட்சை (இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு) நடத்துகிறார்கள். இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பது இது 10-வது முறையாகும். இதுவரை நடந்த சந்திப்புகளில் டொமினிக் திம் 7 முறையும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 தடவையும் வென்றுள்ளனர். யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களது முதல் கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமையும்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் லாரா சிஜெமுன்ட் (ஜெர்மனி)-ஸ்வோனரிவா (ரஷியா) ஜோடி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் நிகோல் மெலிசார் (அமெரிக்கா)-யிபான் சூ (சீனா) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத், கர்நாடக இடைத்தேர்தல்; அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது பா.ஜ.க.
குஜராத் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது.