டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’ + "||" + US Open Tennis: Japan's Naomi Osaka 'Champion'

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
நியூயார்க்,

நியூயார்க் நகரில் நடந்து வந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகாவும் (ஜப்பான்), 27-ம் நிலை வீராங்கனை விக்டோரியா அஸரென்காவும் (பெலாரஸ்) மோதினர். ரசிகர்கள் இன்றி வெறுமையான களத்தில் மல்லுக்கட்டினாலும் இருவரும் துளியும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மட்டையை சுழட்டியடித்தனர்.

முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய அஸரென்கா வெறும் 26 நிமிடத்தில் அந்த செட்டை தன்வசப்படுத்தினார். 2-வது செட்டிலும் தொடக்கத்தில் அஸரென்கா 2-0 என்று முன்னிலை பெற்றார். இதன் பிறகு 3-வது கேமில் பந்தை வெளியே அடித்து விட்டு அஸரென்கா புள்ளியை தாரைவார்க்க அதில் இருந்து ஒசாகாவின் கை ஓங்கியது. தனது வேகத்தை அதிகரித்து வலுவான ஷாட்டுகளை விளாசிய ஒசாகா எதிராளியின் 3 சர்வீஸ்களை முறியடித்து 2-வது செட்டை சொந்தமாக்கினார். மணிக்கு அதிகபட்சமாக 119 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய ஒசாகா 3-வது செட்டிலும் அஸரென்காவின் சவாலை தகர்த்தார்.

1 மணி 53 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் நவோமி ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இறுதிசுற்றில் முதல் செட்டை இழந்து அதன் பிறகு ஒரு வீராங்கனை அமெரிக்க ஓபனில் மகுடம் சூடுவது 1994-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். 22 வயதான ஒசாகா வென்ற 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபனையும், 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனையும் வென்று இருந்தார். இதன் மூலம் ஒற்றையரில் அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஆசிய நாட்டவர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு சீனாவின் லீ நா 2 கிராண்ட்ஸ்லாம் பெற்றதே சாதனையாக இருந்தது.

வெற்றி பெற்ற ஒசாகா ரூ.22 கோடியை பரிசுத்தொகையாக அள்ளினார். மேலும் இன்று வெளியிடப்படும் புதிய தரவரிசையில் அவர் 3-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 31 வயதான அஸரென்கா ஏற்கனவே 2012, 2013-ம் ஆண்டுகளிலும் அமெரிக்க ஓபனில் இறுதி ஆட்டத்தில் தோற்று இருந்தார். இந்த முறையும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. 2-வது இடத்தை பிடித்த அவர் ரூ.11 கோடியை பரிசாக பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து: அரியானா அணி ‘சாம்பியன்’
43-வது தேசிய சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 26 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றன.
2. முஷ்டாக் அலி கிரிக்கெட் சாம்பியன்: தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள்
தமிழக அணி வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார்கள் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை.