பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், டொமினிக் திம் காயத்தால் செரீனா விலகல்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், டொமினிக் திம் காயத்தால் செரீனா விலகல்
x
தினத்தந்தி 30 Sep 2020 9:46 PM GMT (Updated: 30 Sep 2020 9:46 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ரபெல் நடால், டொமினிக் திம் முன்னேறினர். காயத்தால் செரீனா விலகினார்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மெக்டொனால்டுவை துவம்சம் செய்து 3-வது சுற்றை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 44 நிமிடங்கள் நடந்தது. பிரெஞ்ச் ஓபனில் நடாலின் 95-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-1, 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் ஜாக் சோக்கை (அமெரிக்கா) வீழ்த்தினார். இதே போல் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை (ஜெர்மனி) வெளியேற்றி 3-வது சுற்றுக்குள் கால்பதித்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் வாவ்ரிங்காவின் 150-வது வெற்றியாக இது பதிவானது.

23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-வது சுற்றில் பிரோன்கோவாவை (பல்கேரியா) எதிர்கொள்ள இருந்த நிலையில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பின்வாங்கினார். அமெரிக்க ஓபன் போட்டியின் போது இடது கணுக்காலில் காயமடைந்து வலியால் அவதிப்பட்ட செரீனா அதன் பிறகு தேறினார். ஆனால் இப்போது அதே பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படுவதாகவும், இதனால் வேறு வழியின்றி விலகுவதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 39 வயதான செரீனா பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை ருசித்தவர் ஆவார். ஆனால் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு அதாவது 2017-ம் ஆண்டுக்கு பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு (பெலாரஸ்), தரவரிசையில் 161-வது இடம் வகிக்கும் கரோலினா ஸ்கிமிட்லோவா (சுலோவக்கியா) அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 6-2, 6-2 என்ற நேர் செட்டில் அஸரென்காவை விரட்டியடித்து அவர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஸ்விடோலினா (உக்ரைன்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மரிய சக்காரி (கிரீஸ்), பவுச்சார்ட் (கனடா) உள்ளிட்டோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

Next Story