டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் டொமினிக் திம், சிமோனா ஹாலெப் + "||" + French Open Tennis: Dominic Thiem, Simona Halep in 4th round

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் டொமினிக் திம், சிமோனா ஹாலெப்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் டொமினிக் திம், சிமோனா ஹாலெப்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் நார்வே இளம் வீரர் காஸ்பர் ரூட்டை தோற்கடித்து தொடர்ந்து 5-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-1, 6-4, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் ஸ்டீபனோ டிராவாக்லியாவை விரட்டினார். அதே சமயம் முன்னாள் சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா போராடி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை 54 நிமிடத்தில் பந்தாடி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கால்இறுதியில் அனிசிமோவாவிடம் அடைந்த தோல்விக்கு ஹாலெப் பழிதீர்த்துக் கொண்டார். மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் அலெக்சான்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தினார்.

இன்னொரு ஆட்டத்தில் 19 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சார்ட்டுக்கு அதிர்ச்சி அளித்தார். பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) தோற்கடித்தார்.