பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு தகுதி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 3 Oct 2020 11:47 PM GMT (Updated: 3 Oct 2020 11:47 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில், தகுதி சுற்றில் ஆடி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிக்குள் அடியெடுத்து வைத்த 186-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டேனியல் அல்ட்மாயெர் 6-2, 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பெரேட்டினிக்கு (இத்தாலி) அதிர்ச்சி அளித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 15 நிமிடம் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் காரெனோ பஸ்டா 6-4, 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பாவ்டிஸ்டா அகுட்டை வீழ்த்தினார். இதே போல் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வெளியேற்றினார். சிட்சிபாஸ் (கிரீஸ்), டிமிட்ரோவ் (பல்கேரியா), புக்சோவிக்ஸ் (ஹங்கேரி). கச்சனோவ் (ரஷியா) ஆகியோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-2, 6-0 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ருமேனியா வீராங்கனை ஐரிஷ் பாராவை ஊதித்தள்ளி 4-வது சுற்றை எட்டினார். செக்குடியரசின் கிவிடோவா தன்னை எதிர்த்த அன்னி பெர்னாண்டசை (கனடா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 4-6, 3-6 என்ற நேர் செட்டில் படோசா கிபெர்ட்டிடம் (ஸ்பெயின்) ‘சரண்’ அடைந்தார்.

இதே போல் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள சபலென்கா (பெலாரஸ்) 6-7 (7-9), 6-2, 3-6 என்ற செட் கணக்கில் 35-ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜாபெரிடம் (துனிசியா) வீழ்ந்தார்.

Next Story