டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை + "||" + French Open tennis: Podoroska's record advances to semifinals

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:  அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவை சந்தித்தார்.

1 மணி 19 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தினார்.

மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபெரை (துனிசியா) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இதற்கிடையே, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சூதாட்ட புகார் கிளம்பி இருக்கிறது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது.