பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் கிவிடோவா, சோபியா


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் கிவிடோவா, சோபியா
x
தினத்தந்தி 8 Oct 2020 12:00 AM GMT (Updated: 7 Oct 2020 11:09 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்டை விரட்டியடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 20 நிமிடம் தேவைப்பட்டது.

இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை டேனியலி காலின்சை வெளியேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். சோபியா கெனின் அரைஇறுதியில் கிவிடோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மற்றொரு அரைஇறுதியில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா)- இகா ஸ்வியாடெக் (போலந்து) சந்திக்கிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-5, 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவை தோற்கடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

முன்னதாக நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 19 வயதான இத்தாலியின் ஜானிக் சின்னெரை தோற்கடித்து 13-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். பிரெஞ்ச் ஓபனில் 100-வது ஆட்டத்தில் ஆடிய நடால் ருசித்த 98-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வாட்ஸ்மேன் 7-6 (7-1), 5-7, 6-7 (6-8), 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான டொமினிக் திம்முக்கு (ஆஸ்திரியா) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி 8 நிமிடம் நீடித்தது. அரைஇறுதியில் நடால்- ஸ்வாட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

Next Story