டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சோபியா கெனின் + "||" + French Open tennis Sofia Kenin in the final

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சோபியா கெனின்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சோபியா கெனின்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.
பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 54-வது இடத்தில் இருக்கும் 19 வயதான போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் தகுதி நிலை வீராங்கனையும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான நாடியா போடோரோஸ்காவை (அர்ஜென்டினா) 69 நிமிடத்தில் விரட்டியடித்து முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் கடந்த 81 வருடங்களில் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் தனதாக்கினார்.


மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 6-4, 7-5 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சோபியா கெனின் -ஸ்வியாடெக் மோதுகிறார்கள்.

முன்னதாக நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் காரெனோ பஸ்டாவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் போது கழுத்து வலிக்கு மைதானத்தில் சிகிச்சை பெற்று ஆடிய ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் காரெனோ பஸ்டாவை வீழ்த்தி 10-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். இந்த ஆட்டம் 3 மணி 13 நிமிடம் அரங்கேறியது.

தோல்விக்கு பிறகு காரெனோ பஸ்டா அளித்த பேட்டியில் ஆட்டத்தின் போது நெருக்கடியான தருணத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதை ஒரு யுக்தியாக ஜோகோவிச் கையாண்டு வருகிறார் என்று குற்றம்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் சிக்கலை சந்திக்கும் போதோ? தனக்கு சவுகரியம் இல்லை என்று உணரும் போதோ? மருத்துவ சிகிச்சை பெறுவதை ஜோகோவிச் நீண்ட காலமாக வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். நான் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமயத்தில் அவர் சிகிச்சை பெற்றது எனக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்க ஓபன் போட்டியிலும் அவர் இதுபோல் தான் செய்தார். இங்கும் அதே மாதிரி செய்துள்ளார். வருங்காலங்களிலும் இது தொடரும் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே அவருக்கு நாள்பட்ட வலி இருக்கிறதா? அல்லது மனரீதியான பிரச்சினை உள்ளதா? என்பது எனக்கு தெரியாது. இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்’ என்றார்.

ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ரபெல் நடால் (ஸ்பெயின்)-ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), ஜோகோவிச் (செர்பியா)-சிட்சிபாஸ் (கிரீஸ்) சந்திக்கிறார்கள்.