டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மெட்விடேவிடம் வீழ்ந்தார் நடால்


டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மெட்விடேவிடம் வீழ்ந்தார் நடால்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:00 PM GMT (Updated: 22 Nov 2020 11:40 PM GMT)

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடால் மெட்விடேவிடம் வீழ்ந்தார்.

லண்டன்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 4-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவை (ரஷியா) சந்தித்தார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த மெட்விடேவ் 2-வது செட்டிலும் 4-5 என்று பின்தங்கி தோல்வியின் விளிம்புக்கு சென்றார். அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று டைபிரேக்கர் வரை போராடி செட்டை வசப்படுத்திய மெட்விடேவ் இறுதியில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். 2 மணி 35 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

கவுரவமிக்க இந்த போட்டித் தொடரில் நடால் இதுவரை பட்டம் வென்றதில்லை. அந்த சோகம் இந்த தடவையும் தொடருகிறது. அது மட்டுமின்றி முதல் செட்டை கைப்பற்றி விட்டாலே நடால் பெரும்பாலும் வெற்றிக்கனியை பறித்து விடுவார். இப்படி தொடர்ந்து 71 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தார். அந்த சிறப்பு முடிவுக்கு வந்து விட்டது.

24 வயதான மெட்விடேவ் இறுதிப்போட்டியில் டொமினிக் திம்முடன் (ஆஸ்திரியா) மோதுகிறார். இவர்கள் இருவரும் இந்த தொடரில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச், 2-ம் நிலை வீரர் நடால் இருவரையும் சாய்த்து இருப்பது கவனிக்கத்தக்கது.

Next Story