கொரோனா வைரசானது நகைச்சுவை இல்லை; தொற்றில் இருந்து மீண்ட சானியா மிர்சா


கொரோனா வைரசானது நகைச்சுவை இல்லை; தொற்றில் இருந்து மீண்ட சானியா மிர்சா
x
தினத்தந்தி 20 Jan 2021 12:59 AM GMT (Updated: 20 Jan 2021 12:59 AM GMT)

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முழு அளவில் குணமடைந்து உள்ளேன் என கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் அதன்பின்னர் அதில் இருந்து முழு அளவில் குணமடைந்து உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த வருடம் தொடங்கிய பின்னர் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  கடவுள் ஆசியால் நலமுடனும், முழுவதும் குணமடைந்தும் உள்ளேன்.

எனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.  அதிர்ஷ்டவசத்தில் எனக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் இல்லை.  ஆனால் நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.

இதில் கடினம் நிறைந்த பகுதி என்னவெனில், என்னுடைய 2 வயது குழந்தை மற்றும் குடும்பத்திடம் இருந்து தள்ளி இருந்தேன்.  மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்பொழுது, அவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் என்ன ஆவார்கள் என்பது பற்றி என்னால் கற்பனை செய்ய கூட முடியவில்லை என தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு நாளும் புதிய அறிகுறி ஏற்பட்டது.  நிச்சயமற்ற நிலையில், கடுமையாக போராட வேண்டியிருந்தது.  உடலளவில், மனதளவில் மற்றும் உணர்ச்சிபூர்வ முறையில் அதனை எதிர்கொள்வது மிக கடினம் ஆக எனக்கு இருந்தது.

எனது குடும்பத்தினரை மீண்டும் எப்பொழுது காண்பேன் என்ற அச்சம் இருந்தது.  இந்த வைரசானது நகைச்சுவை இல்லை.  என்னால் முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை விசயங்களை பின்பற்றியும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

நம்முடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க கூடிய ஒவ்வொரு விசயமும் நாம் மேற்கொள்ள வேண்டும்.  முககவசம் அணியவும்.  கைகளை கழுவவும்.  உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாத்திடுங்கள்.  இந்த போராட்டத்தில் ஒன்றிணைந்திருப்போம் என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story