ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், ஒசாகா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், ஒசாகா
x
தினத்தந்தி 14 Feb 2021 11:42 PM GMT (Updated: 14 Feb 2021 11:42 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நவோமி ஒசாகா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

மெல்போர்ன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, (7-4), 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) வெளியேற்றி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் பெற்ற 300-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் செர்பியாவின் துசன் லாஜோவிச்சை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் சாம்பியனான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4-6, 4-6, 0-6 என்ற நேர்செட்டில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இதேபோல் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் கனடா வீரர் பெலிக்ஸ் ஆஜெர் அலியாசிம் 6-3, 6-1, 3-6, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ரஷியாவின் அஸ்லான் கரட்செவிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி 2-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

செரீனா வெற்றி

7 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீராங்கனையான சபலென்காவை (பெலாரஸ்) சாய்த்து 13-வது முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த ஆட்டம் 2 மணி 9 நிமிடம் அரங்கேறியது.

மற்ற ஆட்டங்களில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கையும் (போலந்து), சீன தைபே வீராங்கனை சு வெய் சிக் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் வான்ட்ரோசோவாவையும் விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தனர். 

Next Story