ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், செரீனா


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், செரீனா
x
தினத்தந்தி 17 Feb 2021 12:51 AM GMT (Updated: 17 Feb 2021 12:51 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 114-வது இடத்தில் இருப்பவரும், தகுதி சுற்றின் மூலம் முன்னேறி கிராண்ட்ஸ்லாம் போட்டியின் பிரதான சுற்றில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தவருமான அஸ்லான் கரட்செவ் (ரஷியா), தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள பல்கேரியா வீரர் டிமிட்ரோவை சந்தித்தார்.

தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியதுடன் முதல் செட்டையும் தன்வசப்படுத்திய டிமிட்ரோவ் ஆட்டத்தில் அதன் பிறகு தொய்வு ஏற்பட்டது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட கரட்செவ் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 3-வது செட்டில் முதுகுவலி பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று ஆடிய டிமிட்ரோவால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. 2 மணி 32 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கரட்செவ் 2-6, 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் 1968-ம் ஆண்டுக்கு பிறகு ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு அரைஇறுதியை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை கரட்செவ் படைத்தார்.

மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (6-8), 6-2, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றி 9-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேற்றம் கண்டார். இந்த வெற்றியை பெற ஜோகோவிச் 3½ மணி நேரம் போராட வேண்டி இருந்தது. அரைஇறுதியில் ஜோகோவிச், கரட்செவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) துவம்சம் செய்து 9-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 21 நிமிடமே தேவைப்பட்டது.

இதே போல் முன்னாள் சாம்பியன் நவோமி ஒசாகா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் சீனதைபேயின் சு வெய்சியை விரட்டியடித்து அரைஇறுதியை உறுதி செய்தார். அரைஇறுதியில் செரீனா வில்லியம்ஸ்-நவோமி ஒசாகா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Next Story