உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத்தில் நீடிப்பு


உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 1:27 AM GMT (Updated: 23 Feb 2021 1:27 AM GMT)

உலக டென்னிஸ் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவில் டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை 9-வது முறையாக கைப்பற்றி அசத்திய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (12,030 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். கால்இறுதியில் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,850) 2-வது இடத்தில் தொடருகிறார். இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த ரஷியாவின் டேனில் மெட்விடேவ் (9,735) ஒரு இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தையும், 4-வது சுற்றில் வெளியேறிய ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (9,125) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். முழங்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகிய சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (6,630) 5-வது இடத்தில் தொடருகிறார்.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (6,595), ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (5,615), ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் (4,609), அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மான் (3,480), இத்தாலியின் பெரேட்டினி (3,480) ஆகியோர் முறையே 6 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

3-வது சுற்றுக்கு தகுதி கண்ட கனடா வீரர் ஷபோவலோவ் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தையும், முதல் சுற்றில் தோல்வி அடைந்த மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஒரு இடம் சரிந்து 12-வது இடத்தையும், கால்இறுதிக்குள் நுழைந்த பல்கேரியாவின் டிமிட்ரோவ் 4 இடம் உயர்ந்து 17-வது இடத்தையும், 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்த நார்வேயின் காஸ்பெர் ரூட் 4 இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அறிமுக வீரராக களம் கண்டு அரைஇறுதி வரை முன்னேறி சாதனை படைத்த ரஷிய வீரர் அஸ்லான் கரட்செவ் 72 இடங்கள் எகிறி தனது சிறந்த தரநிலையாக 42-வது இடத்தை அடைந்துள்ளார். முதல் சுற்றுடன் நடையை கட்டிய இந்திய வீரர் சுமித் நாகல் 4 இடம் சறுக்கி 148-வது இடத்தையும், இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 7 இடம் பின்தங்கி 138-வது இடத்தையும், ராம்குமார் 10 இடம் சரிந்து 200-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதியுடன் வெளியேறிய ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (9,186 புள்ளிகள்) முதலிடத்தில் மாற்றமின்றி தொடருகிறார். சாம்பியன் பட்டத்தை 2-வது முறையாக உச்சி முகர்ந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (7,835) ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தையும், கால்இறுதியில் தோல்வி அடைந்த ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (7,255) ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் சோபியா கெனின் (5,760) 4-வது இடத்திலும், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (5,370) 5-வது இடத்திலும், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (5,205) 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். அரைஇறுதியில் தோல்வி கண்ட அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (4,915) 4 இடம் முன்னேறி 7-வது இடத்தையும், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா (4,810) ஒரு இடம் பின்தங்கி 8-வது இடத்தையும் பெற்றுள்ளனர். கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (4,735) 9-வது இடத்தில் நீடிக்கிறார். செக்குடியரசின் கிவிடோவா 2 இடம் சறுக்கி (4,571) 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 11 இடங்கள் உயர்ந்து 13-வது இடத்தை வசப்படுத்தி இருக்கிறார். கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து பிரதான சுற்று வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 13 இடங்கள் முன்னேறி 168-வது இடத்தை பிடித்துள்ளார்.

Next Story