டென்னிஸ்

தரவரிசையில் அதிக வாரம் முதலிடம்: பெடரரின் சாதனையை முறியடித்தார், ஜோகோவிச் + "||" + Top week high in the rankings: Breaking Federer's record, Djokovic

தரவரிசையில் அதிக வாரம் முதலிடம்: பெடரரின் சாதனையை முறியடித்தார், ஜோகோவிச்

தரவரிசையில் அதிக வாரம் முதலிடம்: பெடரரின் சாதனையை முறியடித்தார், ஜோகோவிச்
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்.

நம்பர் ஒன் இடத்தில் அதிக வாரம்

உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று இருக்கும் 33 வயதான ஜோகோவிச் 2011-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி முதல்முறையாக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறினார். தற்போது அவர் 5-வது முறையாக முதலிடத்தில் இருக்கிறார். 5 வெவ்வேறு காலகட்டங்களில் அவர் மொத்தம் 311 வாரங்கள் முதலிடத்தில் இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பெடரர் சாதனை முறியடிப்பு

48 ஆண்டு கால உலக தரவரிசை வரலாற்றில் இதற்கு முன்பு 39 வயதான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மொத்தம் 310 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜோகோவிச் நேற்று தகர்த்தார். பெடரர் முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் பெடரர் இந்த வாரத்தில் மீண்டும் சர்வதேச போட்டியில் களம் காண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் இறுதியில் அதிக முறை நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்த வீரர்கள் பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (இருவரும் தலா 6 முறை) ஆகியோர் இணைந்து முதலிடத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் மகிழ்ச்சி

தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடத்தை பிடித்து இருப்பது குறித்து ஜோகோவிச் கருத்து தெரிவிக்கையில், ‘டென்னிஸ் ஜாம்பவான்களின் பாதையில் நானும் பயணிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாம்பவான்களின் வரிசையில் நானும் இடம் பிடிக்க வேண்டும் என்று இளம் வயதில் கண்ட கனவு தற்போது உறுதியாகி இருக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் முழுமையான ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் எல்லாவற்றையும் சாத்தியமாக்கலாம்’ என்றார்.