மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா


மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நவோமி ஒசாகா, பியான்கா
x
தினத்தந்தி 30 March 2021 7:09 PM GMT (Updated: 30 March 2021 7:09 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, கனடாவின் பியான்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

மியாமி, 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 39-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் மார்டோன் புக்சோவிச்சை 52 நிமிடத்தில் விரட்டியடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆண்டில் ரூப்லெவ் சுவைத்த 18-வது வெற்றி இதுவாகும்.

ஆஷ்லி பார்ட்டி அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 17-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) துவம்சம் செய்து தொடர்ச்சியாக 23-வது வெற்றியை ருசித்ததுடன், முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.

கால்இறுதியில் பியான்கா

இன்னொரு ஆட்டத்தில் 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இதேபோல் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சரிவை சமாளித்து 2-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மரியா சக்காரி (கிரீஸ்), செவஸ்தோவா (லாத்வியா), சபலென்கா (பெலாரஸ்), சாரா சோரிப்ஸ் டோர்மோ (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள். 

Next Story