மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மெட்விடேவ், ஒசாகா அதிர்ச்சி தோல்வி


மியாமி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மெட்விடேவ், ஒசாகா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 1 April 2021 9:41 PM GMT (Updated: 1 April 2021 9:41 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் ரஷிய வீரர் மெட்விடேவ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

பாவ்டிஸ்டா அகுட் வெற்றி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 12-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பாவ்டிஸ்டா அகுட்டை சந்தித்தார். 32 வயதான பாவ்டிஸ்டா அகுட் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் அபாரமாக செயல்பட்டு 6-4, 6-2 என்ற நேர்செட்டில் மெட்விடேவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 32 நிமிடம் நடந்தது.

இத்தாலி இளம் வீரர் அபாரம்

மற்றொரு கால்இறுதியில் இத்தாலியை சேர்ந்த 19 வயதான ஜானிக் சின்னெர் 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக்கை விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைஇறுதியில் பாவ்டிஸ்டா அகுட்-சின்னெர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 25-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

ஒசாகா அதிர்ச்சி தோல்வி

69 நிமிடம் நீடித்த இந்த மோதலில் மரியா சக்காரி 6-0, 6-4 என்ற நேர்செட்டில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். முதல் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மரியா சக்காரி அடுத்த செட்டில் 0-3 என்ற கணக்கில் சரிவை சந்தித்தாலும், அதில் இருந்து அருமையாக மீண்டு வந்து தொடர்ச்சியாக 23 ஆட்டங்களில் வென்று இருந்த நவோமி ஒசாகாவின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடைசி கட்டத்தில் ஒசாகா ஆட்டத்தில் அதிக தவறு இழைத்தது அவருக்கு பாதகமாக அமைந்தது.

இன்னொரு கால்இறுதியில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனுமான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டோர்மோவை சாய்த்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் பியான்கா, மரியா சக்காரியுடன் மோதுகிறார்.


Next Story