மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி-பியான்கா


மியாமி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி-பியான்கா
x
தினத்தந்தி 2 April 2021 9:46 PM GMT (Updated: 2 April 2021 9:46 PM GMT)

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஷ்லி பார்ட்டி, பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.

ஆந்த்ரே ரூப்லெவ் வெற்றி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 87-ம் நிலை வீரரான செபாஸ்டியன் கோர்டாவை சந்தித்தார்.

1 மணி 42 நிமிடம் அரங்கேறிய விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரூப்லெவ் 7-5, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் செபாஸ்டியன் கோர்டாவை விரட்டியடித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் 37-வது இடத்தில் உள்ள ஹூபெர்ட் ஹூர்காஸ்சிடம் (போலந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 2 மணி 20 நிமிடம் நீடித்தது. வலுவான நிலையில் இருந்து திடீரென சரிவை சந்தித்து அடைந்த இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று சிட்சிபாஸ் வருத்தம் தெரிவித்தார்.

ஆஷ்லி பார்ட்டி அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 5-வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 29 நிமிடம் தேவைப்பட்டது.

மற்றொரு அரைஇறுதியில் அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவருமான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 7-6 (9-7), 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 25-ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரியை (கிரீஸ்) சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 42 நிமிடம் நீடித்தது. இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி-பியான்கா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.


Next Story