மியாமி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஆந்த்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி


மியாமி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஆந்த்ரே ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 3 April 2021 11:41 PM GMT (Updated: 3 April 2021 11:41 PM GMT)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 37-வது இடத்தில் உள்ள ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ்சை (போலந்து) சந்தித்தார். 1 மணி 27 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஹியூபெர்ட் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள 19 வயது இத்தாலி வீரர் ஜானிக் சின்னெர், 12-ம் நிலை வீரரான பாவ்டிஸ்டா அகுட்டை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜானிக் சின்னெர் சரிவில் இருந்து அருமையாக மீண்டு வந்து 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பாவ்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி முதல்தடவையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 28 நிமிடம் நீடித்தது. இந்த வெற்றியின் மூலம் 36 ஆண்டு கால மியாமி ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 4-வது இளம் வீரர் என்ற பெருமையை ஜானிக் சின்னெர் சொந்தமாக்கினார். இறுதிப்போட்டியில் ஜானிக் சின்னெர்-ஹியூபெர்ட் ஹோர்க்காஸ் மோதுகிறார்கள்.


Next Story