இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் கொரோனாவுக்கு பலி


இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 13 May 2021 12:42 AM GMT (Updated: 13 May 2021 12:42 AM GMT)

இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரர் சந்திரசேகர் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.

சென்னை,

இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் வீரரும், புகழ்பெற்ற பயிற்சியாளருமான சென்னையை சேர்ந்த வி.சந்திரசேகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணம் அடைந்தார். தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவராக இருந்த 64 வயது சந்திரசேகருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

1976-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை தமிழகத்தின் தலைசிறந்த வீரராக விளங்கிய சந்திரசேகர் 3 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் 1982-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அரைஇறுதி வரை முன்னேறினார். அந்த ஆண்டில் சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருதையும் பெற்றார்.

1984-ம் ஆண்டு வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் அளவு பிரச்சினை காரணமாக கண்பார்வை மட்டுமின்றி உடல் உறுப்புகள் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் தீவிர சிகிச்சை எடுத்தாலும் அதில் இருந்து அவரால் 70-80 சதவீதம் தான் மீண்டு வர முடிந்தது. தனக்கு தவறான சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி மீது வழக்கு தொடர்ந்த அவர் அந்த சட்ட போராட்டத்தில் வெற்றி கொண்டார்.

உடல் நலன் பாதிப்பு காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போனாலும் சந்திரசேகர் அதனால் மனம் தளர்ந்து முடங்கி போய்விடவில்லை. தனியாக ஒரு டேபிள் டென்னிஸ் பயிற்சி அகாடமி தொடங்கி இளம் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து அவர்கள் சிறந்த வீரர்களாக உருவெடுக்க உதவிகரமாக இருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் தமிழக வீரர் ஜி.சத்யன் மற்றும் முன்னாள் பிரபல வீரர்கள் எஸ்.ராமன், சேத்தன் பபூர், முன்னாள் வீராங்கனைகள் என்.ஆர்.இந்து, எம்.எஸ்.மைதிலி உள்பட பலர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

சந்திரசேகர் மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் தனது இரங்கல் பதிவில், ‘37 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை எதிர்த்து போராடிய ஒரு சாம்பியனை நாம் இழந்து விட்டோம். அவரது மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. டேபிள் டென்னிஸ் விளையாட்டு சிறந்த ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் அற்புதமான வீரரை இழந்து விட்டது. 1980-ம் ஆண்டுகளில் சந்திரசேகர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை பிரபலப்படுத்தினார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் கூறுகையில், ‘சந்திரசேகரின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு நிச்சயமாக தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது குடுப்பத்தினருக்கும் இழப்பாகும். 14 வருடங்களாக அவரிடம் பயிற்சி பெற்றேன். எனது ஆட்ட திறமையை மேம்படுத்திய அவருடைய நினைவுகளும், பயிற்சியும் என்றென்றும் என்னோடு நிலைத்து நிற்கும்’ என்றார்.

Next Story