இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு நடால், பிளிஸ்கோவா முன்னேற்றம்


இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு நடால், பிளிஸ்கோவா முன்னேற்றம்
x
தினத்தந்தி 15 May 2021 12:29 AM GMT (Updated: 15 May 2021 12:29 AM GMT)

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், பிளிஸ்கோவா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ரோம், 

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), 6-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் கடந்த வாரம் மாட்ரிட் ஓபனில் ஸ்வெரேவிடம் கால்இறுதியில் அடைந்த தோல்விக்கு நடால் பழிதீர்த்துக் கொண்டார்.

நடால் அரைஇறுதியில் அமெரிக்க வீரர் ரீலி ஒபெல்காவை சந்திக்கிறார். முன்னதாக தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள ஒபெல்கா கால்இறுதி சுற்றில் 7-5, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் பெடெரிகோ டெல்போனிசை (அர்ஜென்டினா) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-6, 7-5, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதில் கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் 4-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த பிளிஸ்கோவா மூன்று முறை எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு அதன் பிறகு டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 20 நிமிடங்கள் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் பெட்ரா மார்டிச் (குரோஷியா) 7-5, 6-4 என்ற ேநர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெஸ்சிகா பெகுலாவை விரட்டினார். மார்டிச் அரைஇறுதியில் பிளிஸ்கோவாவுடன் மோத இருக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, அமெரிக்காவின் கோேகா காப்பை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்ற ஆஷ்லி பார்ட்டி 2-வது செட்டில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது துரதிர்ஷ்டவசமாக வலது கையில் ஏற்பட்ட காயத்தால் விலக ேநரிட்டது. இதனால் கோகோ காப் அரைஇறுதி வாய்ப்பை பெற்றார்.


Next Story