பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் புதிய சாதனையை நோக்கி நடால்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் புதிய சாதனையை நோக்கி நடால்
x
தினத்தந்தி 29 May 2021 11:06 PM GMT (Updated: 29 May 2021 11:06 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 2-வது வருவது பிரெஞ்ச் ஓபன். இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த போட்டியை பார்க்க தினமும் 5 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 9-ந்தேதியில் இருந்து இந்த எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்த்தப்படும்.

களிமண்தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். 2005-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் அறிமுகமான நடால் இதுவரை 100 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 2 ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருக்கிறார். இங்கு மொத்தம் 13 முறை பட்டத்தை கைப்பற்றி யாரும் நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் இத்தாலி ஓபனில் வாகை சூடிய அவர் கூடுதல் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைப்பார். இந்த முறையும் அவர் பட்டத்தை ருசித்தால், ஒட்டுமொத்த அளவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரின் (20 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைப்பார். 34 வயதான நடால் தனது முதலாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினுடன் மோதுகிறார்.

ஜோகோவிச் மிரட்டுவாரா?

நடாலுக்கு கடும் சவால் அளிக்கக்கூடியவராக நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) வரிந்து கட்டுகிறார். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றியுள்ள ஜோகோவிச் அதில் பிரெஞ்ச் ஓபனை (2016) ஒரே ஒரு மட்டுமே வசப்படுத்தி இருக்கிறார். 4 முறை இறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். அண்மையில் இத்தாலி ஓபன் இறுதி ஆட்டத்தில் நடாலிடம் தோல்வி அடைந்த ஜோகோவிச்சுக்கு அதற்கு பழிதீர்க்க அருமையான வாய்ப்பு கனிந்துள்ளது. கணிப்பு எல்லாம் சரியாக அமைந்தால் அரைஇறுதியில் நடாலும், ஜோகோவிச்சும் மல்லுகட்ட வேண்டியது வரும். ஜோகோவிச் தனது முதல் ரவுண்டில் 66-ம் நிலை வீரரான டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரரான 39 வயதான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) களத்தில் இருந்தாலும் அவரின் ஆட்டத்திறன் வெகுவாக தளர்ந்து விட்டது. இதனால் அவரிடம் இருந்து பெரிய அளவில் ஆக்ரோஷத்தை எதிர்பார்க்க முடியாது. ஜோகோவிச் அல்லது நடால் ஆகியோரில் ஒருவரை அவர் வென்றாலே ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் பிரெஞ்ச் ஓபனில் இன்னும் ஒரு சுற்றில் கூட வெற்றி பெற்றதில்லை. இதுவரை பங்கேற்றுள்ள 4 முறையும் முதல் சுற்றோடு நடையை கட்டியிருக்கிறார். அதனால் இந்த தடவை அவரது இலக்கு, முதல் தடையை வெற்றிகரமாக கடக்க வேண்டும் என்பது தான். அவர் முதல் ரவுண்டில் தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் பப்லிக்கை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார். டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கிரீஸ்), ஆந்த்ரே ரூப்லெப் (ரஷியா) உள்ளிட்டோரும் எதிராளிகளுக்கு கிடுக்குப்பிடி கொடுக்க காத்திருக்கிறார்கள்.

ஸ்வியாடெக்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா) காயத்தால் விலகி விட்டார். நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து), நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), நவோமி ஒசாகா (ஜப்பான்), சோபியா கெனின் (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோரில் ஒருவர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு எந்த கிராண்ட்ஸ்லாமும் வெல்லாத முன்னாள் நம்பர் ஒன் நட்சத்திரமான 39 வயதான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) சாதிப்பது கடினம் தான்.

பரிசு எவ்வளவு?

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.303 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.12½ கோடி வழங்கப்படும். இறுதி ப்போட்டியில் தோற்று 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.6¾ கோடி கிடைக்கும். முதல் சுற்றில் வெற்றி பெற்றாலே ரூ.53 லட்சத்தை அள்ளலாம். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்வோர் ரூ.2¼ கோடி பெறுவார்கள்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story