பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 30 May 2021 10:40 PM GMT (Updated: 2021-05-31T04:10:15+05:30)

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்ட 4-ம் நிலை வீரர் டொமினிக் திம் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

வீழ்ந்தார் டொமினிக்
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நேற்று தொடங்கியது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க நாளிலேயே அதிர்ச்சி தோல்வி நிகழ்ந்தது.உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், பிரெஞ்ச் ஓபனில் 2 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியவருமான டொமினிக் திம் (ஆஸ்திரியா), 68-ம் நிலை வீரரான பாப்லோ அந்துஜாரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த டொமினிக் திம் முதல் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய 3 செட்டுகளை வரிசையாக பறிகொடுத்து 
அதிர்ந்து போனார். 4 மணி 28 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 35 வயதான பாப்லோ அந்துஜார் 4-6, 5-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஒன்றில் டொமினிக் முதல் 2 செட்டை வென்று அதன் பிறகு சறுக்குவது இது 2-வது முறையாகும். அத்துடன் 8-வது முறையாக பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்ற 
அவர் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இதுவே முதல் தடவையாகும்.மற்ற ஆட்டங்களில் கச்சனோவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

ஒசாகா வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் பாட்ரிசியா மரியா டிக்கை (ருமேனியா) தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார். பந்தை வலுவாக வெளியே அடித்து விடும் தவறுகளை ஒசாகா அதிக அளவில் (35 முறை) செய்ததால் தான் 2-வது செட்டில் டைபிரேக்கர் வரை போராட வேண்டி இருந்தது. கிராண்ட்ஸ்லாமில் ஒசாகா தொடர்ச்சியாக ருசித்த 15-வது வெற்றி இதுவாகும். இதேபோல் 4-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) தன்னை எதிர்த்த அனா கொஞ்ஜூவை (குரோஷியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் விரட்டினார். பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பாவ்லிசென்கோவா (ரஷியா), ரைபகினா (கஜகஸ்தான்), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டியவரான கலினினாவிடம் (உக்ரைன்) வீழ்ந்தார்.

Next Story