பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், ஸ்வியாடெக் வெற்றி


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், ஸ்வியாடெக் வெற்றி
x
தினத்தந்தி 31 May 2021 11:48 PM GMT (Updated: 2021-06-01T05:18:28+05:30)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் மெட்விடேவ், ஸ்வியாடெக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பாரீஸ், 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-3, 7-5 என்ற நேர்செட்டில் அலெக்சாண்டர் பப்லிக்கை (கஜகஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் 5-வது முறையாக பங்கேற்றுள்ள மெட்விடேவ் முதல் சுற்றை கடப்பது இதுவே முதல்முறையாகும்.

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய உஸ்பெகிஸ்தான் வீரர் டேனிஸ் இஸ்டோமினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் கால் பதித்தார்.

மற்ற ஆட்டங்களில் ஜானிக் சின்னெர் (இத்தாலி), காஸ்பெர் ரூட் (நார்வே), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ஸ்டீவ் ஜான்சன் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர். முந்தைய நாள் இரவில் நடந்த ஆட்டங்களில் சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோர் தங்களது முதல் தடையை கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரங்கேறிய முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-0, 7-5 என்ற நேர்செட்டில் சுலோவேனியா வீராங்கனை காஜா ஜூவானை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 85-ம் நிலை வீராங்கனையான சுலோவேனியாவின் தமரா ஜிடான்செக் 6-7 (1-7), 7-6 (7-2), 9-7 என்ற செட் கணக்கில் ஆன்ட்ரீஸ்குவை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), மார்கெடா வான்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

Next Story