பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா, ஆஷ்லி வெற்றி - நவோமி ஒசாகா திடீர் விலகலால் பரபரப்பு


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா, ஆஷ்லி வெற்றி - நவோமி ஒசாகா திடீர் விலகலால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2021 3:51 AM GMT (Updated: 2 Jun 2021 3:51 AM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், செரீனா, ஆஷ்லி பார்ட்டி முதல் சுற்றில் வெற்றி கண்டனர். ஜப்பான் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் தொடர்ந்து முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெர்னர்டா பெராவை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று முன்தினம் இரவில் அரங்கேறிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்டில் கமிலியா பெகுவை (ருமேனியா) விரட்டினார். ஸ்விடோலினா (உக்ரைன்), சக்காரி (கிரீஸ்), ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

ஆண்கள் பிரிவில் 7-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லெப் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 42-வது இடம் வகிக்கும் ஜன்-லெனர்ட் ஸ்ட்ரப் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6), 4-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 46 நிமிடங்கள் நீடித்தது.

அதே சமயம் 13 முறை சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை சாய்த்து வெற்றி பெற்றார்.

இரட்டையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- பிராங்கோ ஸ்சுகோர் (குரோஷியா) ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் பீஜ்மான் (ஜெர்மனி)- பாசிலாஷ்விலி (ஜார்ஜியா) இணையை வீழ்த்தியது.

இதற்கிடையே 4 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், உலகின் 2-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முதலாவது சுற்றில் வெற்றி பெற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேச மறுத்தார். போட்டி அமைப்பு குழுவின் வழக்கமான இந்த நடைமுறையை மீறியதற்காக அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதே போன்று ஊடக சந்திப்பை புறக்கணித்தால் போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டது

இந்த நிலையில் தான் தடாலடியாக பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியுள்ள அவர் அதற்கு அளித்த விளக்கத்தில்,‘தற்போதைய சூழலில் நான் இந்த போட்டியில் இருந்து விலகுவது தான் இந்த தொடருக்கும், வீரர்களுக்கும் நல்லது என்று நினைக்கிறேன். சில ஆண்டுகளாக நான் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி வருகிறேன். நான் ஒரு தனிமை விரும்பி என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும். ஓய்வு நேரங்களில் நான் அடிக்கடி காதுகளில் ஹெட்செட் அணிந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது எனக்கு பதற்றத்தை தணிக்க உதவுகிறது. பொது இடங்களில் நான் சரளமாக பேசுபவள் கிடையாது. மீடியாவிடம் பேசும் போது அதிக பதற்றம் அடைந்து விடுகிறேன். சரியான பதில் சொல்வதற்காக முயற்சிக்கும் போது என்னை நானே வருத்திக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். பாரீஸ் வந்ததுமே மிகுந்த மனஅழுத்தத்தை உணர்ந்தேன். மனரீதியான பிரச்சினைகளை சமாளிக்கவே பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தேன். மேலும் என்னால் போட்டியில் தேவையில்லாமல் கவனச்சிதறல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகுகிறேன். எனது முடிவுக்காக போட்டி அமைப்பு குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 23 வயதான ஒசாகாவின் விலகல் டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அவரது நிலைப்பாட்டுக்கு செரீனா வில்லியம்ஸ், நடால், ஆஷ்லி பார்ட்டி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Next Story