டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், ஸ்விடோலினா அபார வெற்றி ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி காயத்தால் விலகல் + "||" + French Open tennis: Djokovic, Federer, Svitolina win 'Number one' player Ashley withdraws due to injury

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், ஸ்விடோலினா அபார வெற்றி ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி காயத்தால் விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர், ஸ்விடோலினா அபார வெற்றி ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி காயத்தால் விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர், ஸ்விடோலினா ஆகியோர் 2-வது சுற்றில் அபார வெற்றி பெற்றனர்.

பிரெஞ்ச் ஓபன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-0, 6-4 என்ற நேர் செட்டில் அன் லியை (அமெரிக்கா) எளிதில் விரட்டியடித்து தொடர்ந்து 7-வது ஆண்டாக 3-வது சுற்றை எட்டினார்.

5-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் தன்னை எதிர்த்த சக நாட்டவரான பாப்டிஸ்டை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் (அமெரிக்கா) வீழ்ந்தார்.

ஆஷ்லி பார்ட்டி விலகல்

உலகின் நம்பர் ஒன் நட்சத்திரமும், 2019-ம் ஆண்டு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் 45-ம் நிலை வீராங்கனை மேக்டா லினெட்டியை (போலந்து) சந்தித்தார். முதலாவது சுற்றின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஆஷ்லி பார்ட்டி 2-வது சுற்றிலும் அதே காயத்தால் தடுமாறினார். ஆட்டத்தின் இடையே சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் பலன் இல்லை. 1-6, 2-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது வலி அதிகமானதால் இனி தன்னால் தொடர்ந்து விளையாட இயலாது என்று கூறி ஆஷ்லி ஒதுங்கினார். இதனால் லினெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது டாப்-3 வீராங்கனைகள் யாரும் களத்தில் இல்லை. ஏற்கனவே 2-ம் நிலை வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா, ஊடக சந்திப்பு புறக்கணிப்பு சர்ச்சையால் முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து விலகினார். இதே போல் பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) போட்டி தொடங்கும் முன்பே பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

சக்காரி (கிரீஸ்), முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

போபண்ணா ஜோடி வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாசை (உருகுவே) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 2-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை (குரோஷியா) வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார். பெரேட்டினி (இத்தாலி), மெட்விடேவ் (ரஷியா), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), கோல்ஸ்கிரீபெர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- பிராங்கோ ஸ்குகோர் (குரோஷியா) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டியாபோ- மோன்ரோ இணையை சாய்த்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தது.