டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + French Open tennis: Greek player Tsitsipas qualifies for the final

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சிட்சிபாஸ் போராடி வெற்றி

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்துவிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிட்சிபாசும் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) பலப்பரீட்சை நடத்தினர். 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றிக்காக சிட்சிபாஸ் 3 மணி 37 நிமிடங்கள் போராட வேண்டியது இருந்தது.

கிராண்ட்ஸ்லாமில் இறுதிப்ேபாட்டியை எட்டிய முதல் கிரீஸ் நாட்டவர் என்ற மகத்தான பெருமையை பெற்றுள்ள 22 வயதான சிட்சிபாஸ் அடுத்து ரபெல் நடால் (ஸ்பெயின்) அல்லது ஜோகோவிச் (செர்பியா) ஆகியோரில் ஒருவரை நாளை சந்திப்பார்.

தப்பித்த கிரெஜ்சிகோவா

முன்னதாக நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரச), 18-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரியை (கிரீஸ்) எதிர்கொண்டார். முதல் செட்டை கிரெஜ்சிகோவாவும், 2-வது செட்டை சக்காரியும் கைப்பற்ற கடைசி செட் நீயா-நானா என்ற குடுமிபிடியால் மேலும் சூடுபிடித்தது. இந்த செட்டில் ஒரு கட்டத்தில் சக்காரி 5-3 என்ற கணக்கில் முன்னிலை கண்டு வெற்றியின் விளிம்புக்கு சென்றார். ஆனால் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கிரெஜ்சிகோவா அதன் பிறகு மீண்டெழுந்து 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். திரில்லிங்கான இந்த ஆட்டம் 3 மணி 18 நிமிடங்கள் நீடித்தது.

‘நாங்கள் உண்மையிலேயே மிகச்சிறப்பாக விளையாடினோம். இருவருமே வெற்றிக்கு தகுதியானவர்கள். ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். அது நானாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று 25 வயதான கிரெஜ்சிகோவா கூறினார். அவர் பெண்கள் இரட்டையர் பிரிவிலும் (சக நாட்டவர் சினியாகோவாவுடன் இணைந்து) இறுதிப்போட்டிக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி சுற்றில் கிரெஜ்சிகோவா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவுடன் மோதுகிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு எந்த ஒரு கிராண்ட்ஸ்லாமும் வென்றது கிடையாது.