டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வென்றதும் இளம் ரசிகருக்கு பேட்டை பரிசாக வழங்கிய ஜோகோவிச் + "||" + Djokovic presents a cap to a young fan after winning the French Open tennis

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வென்றதும் இளம் ரசிகருக்கு பேட்டை பரிசாக வழங்கிய ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வென்றதும் இளம் ரசிகருக்கு பேட்டை பரிசாக வழங்கிய ஜோகோவிச்
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் வென்றதும் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இளம் ரசிகருக்கு பேட்டை பரிசாக வழங்கினார்.
பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் வரிசையில் தலா 20 பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை சமன் செய்ய ஜோகோவிச்சுக்கு இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே தேவையாகும். அத்துடன் ஜோகோவிச் பிரெஞ்ச் ஓபனை 2-வது முறையாக வென்றதன் மூலம் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்த பட்சம் 2 முறை பட்டத்தை கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தனது போட்டி முடிந்ததும் ரசிகர்கள் கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை பார்த்த இளம் ரசிகருக்கு தன்னுடைய டென்னிஸ் பேட்டை (ராக்கெட்) ஜோகோவிச் பரிசாக வழங்கினார். எதிர்பாராத இந்த பரிசினால் திகைத்து போன அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். டென்னிஸ் பேட்டை பரிசாக வழங்கியது ஏன்? என்பது குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘இறுதிப்போட்டி முழுவதும் அந்த ரசிகரின் உற்சாக குரல் எனது காதில் ஒலித்து கொண்டே இருந்தது. குறிப்பாக நான் முதல் 2 செட்களை இழந்து பின்தங்கி இருக்கையில் அவர் என்னை ஊக்கப்படுத்தினார். உண்மையாகவே பயிற்சியாளர் போன்று ஆட்டத்தின் தன்மைக்கு தகுந்தபடி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எனது பேட்டை வழங்கினேன்’ என்றார்.