விம்பிள்டன் டென்னிஸ்: ஒசாகா விலகல்


விம்பிள்டன் டென்னிஸ்: ஒசாகா விலகல்
x
தினத்தந்தி 19 Jun 2021 12:59 AM GMT (Updated: 2021-06-19T06:29:44+05:30)

உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்) சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் முதலாவது சுற்றில் வெற்றி பெற்றதுடன் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.

வழக்கமான செய்தியாளர் சந்திப்பு நடைமுறையை தவிர்த்ததால் அபராதத்திற்கு உள்ளான ஒசாகா, தான் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும், அதில் இருந்து மீள்வதற்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அப்போது கூறினார்.

இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி லண்டனில் தொடங்கும் விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்பதில்லை என்று 23 வயதான ஒசாகா முடிவு எடுத்துள்ளார். இதை உறுதிப்படுத்திய அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டூவர்ட் டுகிட், ‘இந்த ஆண்டில் ஒசாகா விம்பிள்டனில் ஆடமாட்டார். தற்போது தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குள் அவர் தயாராகி விடுவார். உள்நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் ஒலிம்பிக்கில் களம் காண ஆர்வமுடன் இருக்கிறார்’ என்றார். முன்னதாக ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் விம்பிள்டனில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Next Story