விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் இங்கிலாந்து வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்


விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் இங்கிலாந்து வீரரை சந்திக்கிறார், ஜோகோவிச்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:32 AM GMT (Updated: 26 Jun 2021 1:32 AM GMT)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் தனது முதல் சுற்றில் இங்கிலாந்து வீரரை சந்திக்கிறார்.

லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்தானது. அதனால் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விம்பிள்டனில் கால்பதிக்க முன்னணி நட்சத்திரங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த போட்டியில் யார், யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பிரதான சுற்று வாய்ப்பை பெற்ற இங்கிலாந்து இளம் வீரர் ஜாக் டிராப்பருடன் மோதுகிறார். இதுவரை 19 ‘கிராண்ட்ஸ்லாம்’ கைப்பற்றியுள்ள ஜோகோவிச் விம்பிள்டனிலும் மகுடம் சூடி அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவா்களான ரோஜர் பெடரர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்யும் வேட்கையுடன் உள்ளார். நடால் இந்த முறை விம்பிள்டனில் ஆடவில்லை.

8 முறை சாம்பியனான மூத்த வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது முதலாவது ரவுண்டில் 42-ம் நிலை வீரர் அட்ரியன் மனரினோவை (பிரான்ஸ்) எதிர்கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. 2-ம் நிலை வீரர் ரஷியாவின் மெட்விடேவ், ஜெர்மனியின் லெனர்ட் ஸ்டிரப்புடன் தனது சவாலை தொடங்குகிறார். இதே போல் கிரீசின் சிட்சிபாஸ், அமெரிக்காவின் டியாபோவுடன் மோதுகிறார். கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் கால்இறுதி சுற்றில் ஜோகோவிச், ஆந்த்ரே ரூப்லெவையும் (ரஷியா), பெடரர், மெட்விடோவையும் சந்திக்ககூடும்.

ெபண்கள் ஒற்றையர் பிாிவில் ‘நம்பர் ஒன்’ மங்கை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு மறுபிரவேசம் செய்துள்ள கார்லா சுவாரஸ் நவரோவையும் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 7 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாஸ்னோவிச்சையும் (பெலாரஸ்) எதிர்கொள்கிறார்கள்.

இதற்கிடையே, ஒற்றையர் பிரிவின் நடப்பு சாம்பியனான ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் நேற்று விலகினார். கடந்த மாதம் ரோமில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் போது இடது பின்னங்காலில் காயமடைந்த 3-ம் நிலை வீராங்கனையான ஹாலெப் அதில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. ‘காயத்தில் இருந்து குணமடையாததால் மிகவும் வருத்தத்துடன் விம்பிள்டனில் இருந்து விலகுகிறேன். ஒரு நடப்பு சாம்பியனாக அழகான இந்த மைதானத்தில் களம் காணும் ஆவலில் இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

Next Story