விம்பிள்டன் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கான்ட்டா விலகல்


விம்பிள்டன் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கான்ட்டா விலகல்
x
தினத்தந்தி 28 Jun 2021 12:39 AM GMT (Updated: 28 Jun 2021 12:39 AM GMT)

விம்பிள்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கான்ட்டா அறிவித்துள்ளார்.

லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்தானது. அதனால் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு விம்பிள்டனில் கால்பதிக்க முன்னணி நட்சத்திரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

தற்போதைய கொரோனா சூழல் காரணமாக, விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனை மற்றும் அவர்களின் குழுவினருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தின் நம்பர் ஒன் வீராங்கனை ஜோஹன்னா கான்ட்டா மற்றும் அவரது குழுவினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் ஜோஹன்னாவின் குழுவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜோஹன்னா அடுத்த 10 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போதைய சூழலில் தொடர்ந்து விளையாட முடியாத காரணத்தால், இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோஹன்னா கான்ட்டா அறிவித்துள்ளார்.

Next Story