டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்கள் பெடரர், கோன்டா விலகல்


டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்கள் பெடரர், கோன்டா விலகல்
x
தினத்தந்தி 14 July 2021 7:35 PM GMT (Updated: 14 July 2021 7:35 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து டென்னிஸ் நட்சத்திரங்கள் பெடரர், கோன்டா விலகியுள்ளார்.

லாசானே,

டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து 20 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், உலகின் 9-ம் நிலை டென்னிஸ் வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டு கால்முட்டியிலும் காயத்துக்கு ஆபரேஷன் செய்த பிறகு குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் பெடரர் சமீபத்தில் விம்பிள்டனில் கால்இறுதியோடு வெளியேறினார். 

அதன் பிறகு மீண்டும் கால்முட்டியில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ஒலிம்பிக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் 39 வயதான பெடரர் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகுடம் சூடியுள்ள பெடரர், ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றது கிடையாது.

இதே போல் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டாவும் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள கோன்டா, கடந்த 2 வாரங்களாக எந்த பயிற்சியிலும் ஈடுபடாததால் ஒலிம்பிக் போட்டிக்குள் தயாராக இயலாது என்று விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே ரபெல் நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப், பியான்கா ஆகிய டென்னிஸ் பிரபலங்களும் காயம் மற்றும் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக்கில் இருந்து ‘ஜகா’ வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story