சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அஸரென்கா வெற்றி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அஸரென்கா வெற்றி
x
தினத்தந்தி 19 Aug 2021 11:59 AM IST (Updated: 19 Aug 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா வெற்றி பெற்றார்.

சர்வதேச டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினி, 49-ம் நிலை வீரரான ஆல்பர்ட் ரமோஸ் வினோலஸ்சை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.2 மணி 20 நிமிடம் அரங்கேறிய விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்ப சரிவில் இருந்து மீண்டு வந்த பெரேட்டினி 6-7 (5-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஆல்பர்ட் ரமோஸ்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஷபோவலோவ் அதிர்ச்சி தோல்வி
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 50-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேயர் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் 10-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவலோவ்க்கு (கனடா) அதிர்ச்சி அளித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். டிமிட்ரோவ் (பல்கேரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது முதல் தடையை கடந்தனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 15-வது இடத்தில் இருப்பவருமான பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவின் சாம்சோனோவாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெலின்டா வெற்றி
இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் வான்ட்ரோசோவாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலியின் கமிலா ஜியார்ஜியை எளிதில் தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஆன்ஸ் ஜாபிர் (துனிசியா) ஆகியோர் வெற்றி கண்டு முன்னேறினார்கள்.

Next Story