சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 22 Aug 2021 8:54 AM GMT (Updated: 22 Aug 2021 8:54 AM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரைஇறுதியில் மெட்விடேவ்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 12-ம் நிலை வீரரான பாப்லோ காரெனோ பஸ்டாவை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 54 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் காரெனோ பஸ்டாவை ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார்.அரைஇறுதியில் மெட்விடேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவ்வை சந்திக்கிறார். முன்னதாக ரூப்லெவ் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பெனோய்ட் பேர்ரை போராடி சாய்த்தார்.

சிட்சிபாஸ் வெற்றி
மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரரான பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை (கனடா) தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 12 நிமிடம் நீடித்தது. அரைஇறுதியில் சிட்சிபாஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் (ஜெர்மனி) மோதுகிறார். தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கால்இறுதியில் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் நார்வேயின் கேஸ்பர் ரூட்டை விரட்டியடித்தார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்பரோ ஜிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி அரைஇறுதியை எட்டினார்.அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை சந்திக்கிறார். கால்இறுதியில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 3-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது அவரை எதிர்த்து ஆடிய கிவிடோவா (செக்குடியரசு) வயிறு பிரச்சினை காரணமாக விலகியதால் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

ஒலிம்பிக் சாம்பியன் அவுட்
இன்னொரு கால்இறுதியில் 76-ம் நிலை வீராங்கனையான ஜில் டீச்மான் (சுவிட்சர்லாந்து) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடத்தில் இருப்பவருமான சக நாட்டு வீராங்கனை பெலின்டா பென்சிச்சுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

இதே போல் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து ஆடிய ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 5-7, 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிளிஸ்கோவா, அடுத்து அரைஇறுதியில் ஜில் டீச்மானுடன் மோதுகிறார்.

Next Story