சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர், ஆஷ்லி பார்ட்டி ‘சாம்பியன்’


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர், ஆஷ்லி பார்ட்டி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 24 Aug 2021 5:27 AM GMT (Updated: 24 Aug 2021 5:27 AM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

அலெக்சாண்டர் ஆதிக்கம்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 5-வது இடம் வகித்தவருமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ். 7-ம் நிலை வீரரான ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தி முதல்முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 59 நிமிடமே தேவைப்பட்டது. இதன் மூலம் போரிஸ் பெக்கருக்கு (1985-ம் ஆண்டு) பிறகு சின்சினாட்டி ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் ஜெர்மனி வீரர் என்ற சிறப்பை அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பெற்றார். 24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்வது இது 5-வது முறையாகும். 5-வது தடவையாக அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மல்லுக்கட்டிய 23 வயதான ஆந்த்ரே ரூப்லெவ் அவருக்கு எதிராக வெற்றி கண்டதில்லை என்ற சோகம் தொடருகிறது.

தரவரிசையில் முன்னேற்றம்
‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கியதன் மூலம் நேற்று வெளியிடப்பட்ட புதிய ஒற்றையர் தரவரிசைப்பட்டியலில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்துள்ளார். நோவக் ஜோகோவிச் (செர்பியா) முதலிடத்திலும், டேனில் மெட்விடேவ் (ரஷியா) 2-வது இடத்திலும், சிட்சிபாஸ் (கிரீஸ்) 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். வெற்றிக்கு பிறகு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கூறுகையில், ‘இங்கு முதல்முறையாக பட்டம் வென்று இருக்கிறேன். கடந்த வாரம் எனக்கு அற்புதமாக அமைந்தது. நிறைய ஆட்டங்களில் நன்றாக செயல்பட்டேன். இந்த வெற்றியை நான் அதிகம் கொண்டாடவில்லை. ஏனெனில் தோல்வி அடைந்த ஆந்த்ரே இதனை எப்படி உணருவார் என்பது எனக்கு தெரியும். இருவரும் 11 வயது முதலே நண்பர்களாக இருந்து வருகிறோம். ஆந்த்ரே 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட மாஸ்டர்ஸ் பட்டத்தை முதல்முறையாக வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். அவரது விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நினைக்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கைப்பற்றியதை தொடர்ந்து மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அமெரிக்க ஓபன் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார்.

ஆஷ்லி பார்ட்டி அசத்தல்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் மங்கையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), ‘வைல்டு கார்டு’ வாய்ப்பு மூலம் பிரதான சுற்றை எட்டிய 76-ம் நிலை வீராங்கனையான ஜில் டீச்மானை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். முந்தைய ஆட்டங்களில் 2-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஜில் டீச்மான், இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த ஆஷ்லி பார்ட்டியின் அபார ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினார்.1 மணி 13 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜில் டீச்மானை விரட்டியடித்து முதல்முறையாக சின்சினாட்டி பட்டத்தை உச்சி முகர்ந்தார். அவர் வென்ற 13-வது சர்வதேச ஒற்றையர் பட்டம் இதுவாகும். இந்த ஆண்டில் அவர் கைப்பற்றிய 5-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒசாகா பின்னடைவு
புதிய தரவரிசையின்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஷ்லி பார்ட்டி தொடர்ந்து 83-வது வாரமாக முதலிடத்தில் நீடிக்கிறார். 3-வது சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா ஒரு இடம் சறுக்கி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஒரு இடம் உயர்ந்து 2-வது இடத்தை பிடித்துள்ளார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சோபியா கெனின் (அமெரிக்கா), ஸ்விடோலினா (உக்ரைன்), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் முறையே 4 முதல் 8 இடங்களில் தொடருகின்றனர். கால்இறுதியில் தோல்வி கண்ட பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்பரோ கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) ஒரு இடம் முன்னேறி 9-வது இடம் பிடித்து இருக்கிறார். ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா ஒரு இடம் சரிந்து 10-வது இடம் பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீராங்கனை ஜில் டீச்மான் 32 இடங்கள் ஏற்றம் கண்டு 44-வது இடத்தை அடைந்துள்ளார்.

Next Story