அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா, சிட்சிபாஸ் வெற்றி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா, சிட்சிபாஸ் வெற்றி
x
தினத்தந்தி 31 Aug 2021 10:04 PM GMT (Updated: 31 Aug 2021 10:04 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நியூயார்க், 

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 2012-ம் ஆண்டு சாம்பியனும், தரவரிசையில் 112-வது இடத்தில் இருப்பவருமான இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, 3-ம் நிலை வீரரான சிட்சிபாஸ்சை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

இருவரும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக மோதியதால் இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இடுப்பு காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் ஆன்டி முர்ரே அதிக வெப்பத்தால் ஏற்பட்ட வியர்வை காரணமாக மைதானத்தில் தடுமாறி விழுந்தாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை கைப்பற்றினார். அவர் அடுத்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி பறிகொடுத்தார். ஆனால் சரிவில் இருந்து மீண்டு 3-வது செட்டை தனதாக்கி எழுச்சி பெற்றார்.

4-வது செட்டில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மைதானத்தில் சிகிச்சை பெற்ற சிட்சிபாஸ் கழிவறைக்கு செல்வதற்காக இடைவேளை எடுத்து கொண்டார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. தொடர்ந்து ஆடிய சிட்சிபாஸ் அடுத்த 2 செட்களை வசப்படுத்தினார்.

4 மணி 49 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 2-6, 7-6 (9-7), 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆட்டத்தின் போது கழிவறைக்கு செல்ல சிட்சிபாஸ் அதிக நேரம் எடுத்து கொண்டதாக முர்ரே கண்டனம் தெரிவித்தார். ஆனால் தான் விதிமுறை எதனையும் மீறவில்லை என்று சிட்சிபாஸ் மறுத்துள்ளார்.

உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 79-ம் நிலை வீரரான ரிச்சர்ட் கேஸ்குயட்டை (பிரான்ஸ்) விரட்டியடித்து சர்வதேச போட்டியில் தனது 200-வது வெற்றியை பதிவு செய்தார். ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்கிரீபருக்கு எதிரான ஆட்டத்தில் 2014-ம் ஆண்டு சாம்பியனான மரின் சிலிச் (குரோஷியா) 7-6 (7-4), 7-6 (7-3), 2-6, 1-6, 0-2 என்ற கணக்கில் இருக்கையில் காயம் காரணமாக வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா), டிமிட்ரோவ் (பல்கேரியா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மேரி பவுஸ்கோவாவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), சக்காரி (கிரீஸ்), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கோகோ காப் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்) ஆகியோரும் முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.


Next Story