அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் மெட்விடேவ், சிட்சிபாஸ்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் மெட்விடேவ், சிட்சிபாஸ்
x
தினத்தந்தி 2 Sep 2021 10:04 PM GMT (Updated: 2 Sep 2021 10:04 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மெட்விடேவ், சிட்சிபாஸ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீரரான ஜெர்மனியின் டோனிமிக் கோப்பெரை தோற்கடித்து தொடர்ந்து 4-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 48 நிமிடம் தேவைப்பட்டது.

இதேபோல் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 6-4, 6-7 (4-7), 6-0 என்ற செட் கணக்கில் 44-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை (பிரான்ஸ்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-3, 4-6, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேற்றம் கண்ட நெதர்லாந்து வீரர் போடிச் வான் டி ஜான்ட்சல்ப்பிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் பாப்ரினுக்கு எதிரான ஆட்டத்தில் தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் டிமிட்ரோவ் (பல்கேரியா) 6-7 (4-7), 6-7 (4-7), 0-4 என்ற செட் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.

மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), டியாகோ ஸ்வாட்ஸ்மான் (அர்ஜென்டினா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), டேனியல் இவான்ஸ் (இங்கிலாந்து) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை விரட்டியடித்து 12-வது முறையாக 3-வது சுற்றுக்கு முன்னேறினார். தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீராங்கனை ரெபேகா மசரோவாவை வெளியேற்றி 6-வது முறையாக 3-வது சுற்றை எட்டினார்.

மற்ற ஆட்டங்களில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), பார்பரோ கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஆன்ஸ் ஜாபர் (துனிசியா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷியா) ஆகியோரும் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு தாவினார்கள்.


Next Story