அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
x
தினத்தந்தி 6 Sep 2021 12:55 AM GMT (Updated: 6 Sep 2021 12:55 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 3-வது சுற்றில் வீழ்ந்தார். அவர் உலக தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதினார்.

முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் வென்ற நிலையில் கடைசி செட்டில் ஆரம்பத்தில் ஆஷ்லி பார்ட்டியே ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என்று முன்னிலை கண்டு வெற்றியின் விளிம்புக்கு சென்ற ஆஷ்லி பார்ட்டி அதன் பிறகு பந்தை வெளியே அடிப்பது, ‘டபுள்பால்ட்’ என்று அடுத்தடுத்து செய்த தவறுகளால் கோட்டை விட்டார். சரிவில் இருந்து உள்ளூர் ரசிகர்களின் உற்சாக குரலோடு எழுச்சி பெற்ற ஷெல்பி ரோஜர்ஸ் வரிசையாக கேம்களை தனதாக்கியதுடன் டைபிரேக்கர் வரை போராடி 6-2, 1-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஷ்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஆஷ்லிக்கு எதிராக ஷெல்பி ரோஜர்ஸ் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 5 முறை அவரிடம் தோற்று இருந்தார். அத்துடன் நம்பர் ஒன் வீராங்கனை ஒருவரை 28 வயதான ஷெல்பி ரோஜர்ஸ் வீழ்த்தியதும் இதுவே முதல் தடவையாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்து வீறுநடை போடும் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (4), 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை வெளியேற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 32 நிமிடங்கள் நீடித்தது. ஜோகோவிச் அடுத்து அமெரிக்காவின் ஜென்சன் புரூக்பியை சந்திக்கிறார்.

தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 4-6, 4-6, 4-6 என்ற நேர் செட்டில் 46-ம் நிலை வீரர் லாயிட் ஹாரிசிடம் (தென் ஆப்பிரிக்கா) பணிந்தார்.

இதன் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- குரோஷியாவின் இவான் ரோடிக் ஜோடி 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹூகோ நைஸ் (மொனாக் கோ)-ஆர்தர் ரின்டெர்நெச் (பிரான்ஸ்) இணையை சாய்த்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story