அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 7 Sep 2021 1:15 AM GMT (Updated: 7 Sep 2021 1:15 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 27-ம் நிலை வீரரான டேனியல் இவான்சை (இங்கிலாந்து) சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் டேனியல் இவான்சை விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிடம் தேவைப்பட்டது.

கனடா வீரர் அசத்தல்

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் (கனடா) ஆரம்ப சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-2, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடிய 50-ம் நிலை வீரரான பிரான்சிஸ் டியாபோவை (அமெரிக்கா) வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது முறையாக கால்இறுதியை எட்டி இருக்கிறார். அவர் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியிலும் கால்இறுதிக்குள் நுழைந்து இருந்தார். இதன் மூலம் 21 வயதான அலியாசிம் 2008-09-ம் ஆண்டுக்கு பிறகு (அர்ஜென்டினா வீரர் மார்டின் டெல்போட்ரோ) அடுத்தடுத்து 2 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்இறுதிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் 55-ம் நிலை வீரரான 18 வயது கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 5-7, 6-1, 5-7, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கை துவம்சம் செய்து முதல்முறையாக கால் இறுதிக்குள் கால்பதித்தார். இதன் மூலம் ‘ஓபன் ஏரா’ வரலாற்றில் (1968-ம் ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்டது முதல்) அமெரிக்க ஓபன் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சிறப்பை தனதாக்கினார். முந்தைய சுற்றில் அல்காரஸ், 3-ம் நிலை வீரரான சிட்சிபாசை (கிரீஸ்) சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதி சுற்று மூலம் ஏற்றம் பெற்றவரும், 117-ம் நிலை வீரருமான நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்ஸ்சல்ப் 6-3, 6-4, 5-7, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ர்ஸ்மானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்து அசத்தினார். பரபரப்பான இந்த ஆட்டம் 4 மணி 20 நிமிடம் நீடித்தது. கால்இறுதியில் மெட்விடேவ்-போடிக் வான் டி ஜாண்ட்சல்ப், பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்-கார்லோஸ் அல்காரஸ் மோதுகிறார்கள்.

கெர்பர் அதிர்ச்சி தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 73-ம் நிலை வீராங்கனையான 19 வயது லேலா பெர்னாண்டஸ் (கனடா) 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் 2016-ம் ஆண்டு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்இறுதிக்குள் தடம் பதித்தார். அவர் முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை சாய்த்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 13- நிலை வீராங்கனையுமான சிமோனா ஹாலெப்பை (ருமேனியா) வெளியேற்றி 2-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை ருசிக்க அவருக்கு 1 மணி 16 நிமிடமே தேவையாக இருந்தது.

கால்இறுதியில் சபலென்கா

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு) 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலராஸ் வீராங்கனை சபெலென்கா 6-4, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதி ஆட்டங்களில் சபலென்கா-கிரெஜ்சிகோவா, லேலா பெர்னாண்டஸ்-ஸ்விடோலினா சந்திக்கிறார்கள்.

Next Story