அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
x
தினத்தந்தி 8 Sep 2021 5:26 AM GMT (Updated: 8 Sep 2021 5:26 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 99-ம் நிலை வீரரான அமெரிக்காவின் 20 வயதான ஜென்சன் புரூக்பியை சந்தித்தார்.

முதல் செட்டை ஜென்சன் புரூக்பி 29 நிமிடத்தில் தனதாக்கி அசத்தினார். ஆனால் அதன் பிறகு அவர் ஜோகோவிச்சின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். 2 மணி 58 நிமிடம் நடந்த இந்த மோதலில் ஜோகோவிச் 1-6, 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜென்சன் புரூக்பியை வீழ்த்தி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

கால்இறுதியில் ஜோகோவிச், 8-ம் நிலை வீரரான பெரேட்டினியை (இத்தாலி) எதிர்கொள்கிறார். முன்னதாக பெரேட்டினி 6-4, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஜெர்மனியின் ஆஸ்கர் ஒட்டியை வெளியேற்றினார்.

அதே சமயம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவை தோற்கடித்து 4-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-7 (2-7), 7-6 (8-6), 6-3 என்ற செட் கணக்கில் 2019-ம் ஆண்டு சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்குவை (கனடா) போராடி சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 30 நிமிடம் நீடித்தது. கால்இறுதியில் சக்காரி, பிளிஸ்கோவாவை சந்திக்கிறார்.

இதற்கிடையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோஷியாவின் இவான் ரோடிக் இணை 7-6 (7-4), 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ராஜீவ் ராம் (அமெரிக்கா)-ஜோ சலிஸ்பரி (இங்கிலாந்து) ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது. 

Next Story