அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா
x
தினத்தந்தி 9 Sep 2021 3:12 AM GMT (Updated: 9 Sep 2021 3:12 AM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

மெட்விடேவ் வெற்றி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், தகுதி சுற்று மூலம் முன்னேறிய 117-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜாண்ட்ஸ்சல்ப்பை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை கைப்பற்றிய மெட்விடேவ் 3-வது செட்டை பறிகொடுத்தார். அடுத்து சுதாரித்து கொண்ட அவர் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டார். 2 மணி 22 நிமிடம் நடந்த இந்த மோதலில் மெட்விடேவ் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் போடிக் வான் டி ஜாண்ட்ஸ்சல்ப்பை விரட்டியடித்து தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.

வெற்றிக்கு பிறகு 25 வயது மெட்விடேவ் கூறுகையில், ‘நான் முதல் 2 செட்களில் ஆதிக்கம் செலுத்தினேன். 3-வது செட்டில் ஜாண்ட்ஸ்சல்ப் ஆக்ரோஷமாக விளையாடி கடும் நெருக்கடி கொடுத்ததுடன் அந்த செட்டையும் கைப்பற்றினார். ஆனால் 4-வது செட்டில் எனது ஆட்டம் மகிழ்ச்சி அளித்தது. அதில் எனது முதல் சர்வீசில் இரண்டு புள்ளிகளை மட்டுமே இழந்தேன். அந்த செட்டை டைபிரேக்கருக்கு செல்லவிடாமல் வென்றது நல்ல விஷயமாகும். 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டி எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதில் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி (ரபெல் நடாலிடம்) அடைந்தேன். கடந்த வருடம் அரைஇறுதியில் அற்புதமாக விளையாடிய டொமினிக் திம்மிடம் தோற்றேன். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த முறை கொஞ்சம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது கடைசி தடையை வெற்றிகரமாக கடக்க விரும்புகிறேன். இது மிகவும் கடினமான ஒன்றாகும்’ என்றார்.

கனடா வீரர் முன்னேற்றம்
மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம், 55-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ்சை எதிர்கொண்டார். இதில் 21 வயது பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் 6-3, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது கார்லோஸ் அல்காரஸ் காயம் காரணமாக விலகினார். இதனால் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஓபன் வரலாற்றில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். இது குறித்து அலியாசிம் கருத்து தெரிவிக்கையில், ‘அமெரிக்க ஓபனில் அரைஇறுதியை எட்டியது அற்புதமான மைல்கல்லாகும். இந்த போட்டி தொடர் எனக்கு அபாரமாக அமைந்துள்ளது. எனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் அரைஇறுதிப்போட்டியில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவருக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற முயற்சிப்பேன்’ என்றார். அரைஇறுதியில் அலியாசிம், மெட்விடேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

சபலென்கா அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சபலென்கா (பெலாரஸ்), பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 9-ம் நிலை வீராங்கனையுமான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மல்லுக்கட்டினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் கிரெஜ்சிகோவாவை வெளியேற்றி முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 26 நிமிடம் தேவைப்பட்டது.

இன்னொரு கால்இறுதியில் 73-ம் நிலை வீராங்கனையான கனடாவின் 19 வயது லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினாவுக்கு (உக்ரைன்) அதிர்ச்சி அளித்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது. கடந்த திங்கட்கிழமை 19-வது வயதை எட்டிய லேலா பெர்னாண்டஸ் 3-வது மற்றும் 4-வது சுற்று ஆட்டங்களில் முறையே நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரை சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரைஇறுதியில் லேலா பெர்னாண்டஸ், சபலென்காவை சந்திக்கிறார்.

Next Story