அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:21 PM GMT (Updated: 9 Sep 2021 7:21 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 8-ம் நிலை வீரரான இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த ஜோகோவிச் அதன் பிறகு தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிராளியை திணறடித்தார். 3 மணி 30 நிமிடம் நீடித்த இந்த மோதலில் ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை விரட்டியடித்து 12-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் ருசித்த 80-வது வெற்றி இதுவாகும்.

வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், ‘இந்த போட்டி சிறப்பானதாக இருந்தது. சிறந்த வீரரான பெரேட்டினிக்கு எதிரான ஆட்டம் எப்பொழுதும் நெருக்கமான போட்டியாகவே இருக்கும். நான் முதல் செட்டை இழந்தாலும் அதனை மறந்து வித்தியாசமான நிலைக்கு எனது ஆட்டத்தை உயர்த்தினேன். இது எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். பெரேட்டினியின் சர்வீஸ் அருமையாக இருந்தது. ஒவ்வொரு புள்ளியாக கவனம் செலுத்தி அவரை சரிவில் இருந்து மீண்டு வரவிடாமல் பார்த்துக்கொண்டேன். ஒட்டுமொத்தத்தில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக நினைக்கிறேன்’ என்றார்.

அலெக்சாண்டர் வெற்றி

முன்னதாக நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (8-6), 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 46-ம் நிலை வீரரான தென்ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 6 நிமிடம் தேவைப்பட்டது. இது சர்வதேச போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடர்ச்சியாக பெற்ற 16-வது வெற்றியாகும். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதியில் நோவக் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மரியா சக்காரி முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது 4-வது இடத்தில் இருப்பவருமான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார்.

1 மணி 22 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மரியா சக்காரி 6-4, 6-4 என்ற நேர்செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் 26 வயதான மரியாக சக்காரி அமெரிக்க ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் கிரீஸ் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இந்த வெற்றியை கிரீஸ் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக மரியா சக்காரி தெரிவித்தார்.

எம்மா ராட்கானு சாதனை

இன்னொரு கால்இறுதியில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தை சேர்ந்த 18 வயது இளம் புயல் எம்மா ராட்கானு, ஒலிம்பிக் சாம்பியனும், 12-ம் நிலை வீராங்கனையுமான பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார். இதில் எம்மா ராட்கானு 6-3, 6-4 என்ற நேர்செட்டில் பெலின்டா பென்சிச்சை வெளியேற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (1968-ம் ஆண்டு முதல்) அமெரிக்க ஓபன் அரைஇறுதிக்குள் நுழைந்த முதல் தகுதி சுற்று வீராங்கனை என்ற சிறப்பை தனதாக்கினார். அத்துடன் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய 4-வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்த போட்டி தொடரில் அவர் இதுவரை ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஓபன் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை பெற்று இருக்கும் எம்மா ராட்கானு, அரைஇறுதியில் மரியா சக்காரியுடன் மோதுகிறார்.

Next Story