அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
x
தினத்தந்தி 10 Sep 2021 7:29 PM GMT (Updated: 2021-09-11T00:59:54+05:30)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 73-ம் நிலை வீராங்கனையான கனடாவின் 19 வயது லேலா பெர்னாண்டஸ், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சபலென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப லேலா பெர்னாண்டஸ் சரிவை சந்தித்த சமயத்திலும் துணிச்சலுடன் செயல்பட்டு சமாளித்தார். முதல் செட்டை டைபிரேக்கர் வரை சென்று கைப்பற்றிய அவர் அடுத்த செட்டை இழந்தாலும், 3-வது செட்டில் சரிவில் இருந்து மீண்டு வந்து கைப்பற்றினார்.

சபலென்கா தோல்வி

2 மணி 20 நிமிடம் நீடித்த இந்த மோதலில் லேலா பெர்னாண்டஸ் 7-6 (7-3), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டி தொடரில் லேலா பெர்னாண்டஸ் முந்தைய ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), 5-ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

வெற்றிக்கு பிறகு லேலா பெர்னாண்டஸ் கூறுகையில், ‘இது இருவருக்கும் நல்ல போட்டியாக இருந்தது. சபலென்கா சிறப்பான தொடக்கம் கண்டார். நான் டைபிரேக்கரில் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது செட்டில் சில தவறுகள் இழைத்ததால் அதனை இழந்தேன். கடைசி செட் ஆட்டம் நல்ல போராட்டம் நிறைந்ததாக இருந்தது. நான் எனது ஆட்டத்தை நம்பினேன். அது முன்னணி வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதற்கு உதவிகரமாக இருந்தது. ஒவ்வொரு புள்ளிக்காகவும் நான் போராடிய விதத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய மனஉறுதி எனக்கு மிகப்பெரிய பலமாகும். இந்த வாரத்தில் பெற்ற வெற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார்.

இங்கிலாந்து வீராங்கனை அசத்தல்

மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் முன்னேறிய 150-ம் நிலை வீராங்கனையான எம்மா ராட்கானு (இங்கிலாந்து), 18-ம் நிலை வீராங்கனையான 26 வயது மரியா சக்காரியை (கிரீஸ்) சந்தித்தார். 18 வயது இளம் புயலான எம்மா ராட்கானு தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 6-1, 6-4 என்ற நேர்செட்டில் மரியா சக்காரியை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிசுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 24 நிமிடம் தேவைப்பட்டது.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்டு இறுதி சுற்றை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை எம்மா ராட்கானு பெற்றார். அத்துடன் கடந்த 62 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் சொந்தமாக்கினார்.

இளம் வீராங்கனைகள் மோதல்

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான எம்மா ராட்கானு-லேலா பெர்னாண்டஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். 1999-ம் ஆண்டுக்கு பிறகு (செரீனா வில்லியம்ஸ்-மார்ட்டினா ஹிங்கிஸ்) கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் இரண்டு இளம் வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறையாகும்.

Next Story