பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அஸரென்கா, லேலா பெர்னாண்டஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அஸரென்கா, லேலா பெர்னாண்டஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Oct 2021 9:45 PM GMT (Updated: 11 Oct 2021 9:45 PM GMT)

பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அஸரென்கா, லேலா பெர்னாண்டஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

இன்டியன்வெல்ஸ்,

பாரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் உள்ள இன்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் 79-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்லியை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 61-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெட்ரோ மார்டினசை விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்க ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் 57-ம் நிலை வீரரான மெக்ககென்சி மெக்டொனால்டை (அமெரிக்கா) துவம்சம் செய்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 7-5, 6-4 என்ற நேர்செட்டில் 11-ம் நிலை வீராங்கனையான கிவிடோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான கனடாவின் லேலா பெர்னாண்டஸ் சரிவை சமாளித்து 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பாவ்லிசென்கோவாவை சாய்த்து 4-வது சுற்றுக்குள் கால் பதித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 5-7, 4-6 என்ற நேர்செட்டில் பெலாரஸ்சின் சாஸ்னோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

Next Story