ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் ஜோகோவிச்சுக்கு மீண்டும் சிக்கல்..!


ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் ஜோகோவிச்சுக்கு மீண்டும் சிக்கல்..!
x
தினத்தந்தி 6 Jan 2022 12:05 AM GMT (Updated: 6 Jan 2022 12:05 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர். 

இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வரும் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் போட்டியில் இருந்து விலகக்கூடும் என்றும் தகவல் வெளியாகின. 

இதற்கிடையே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விதிவிலக்கு கிடைத்து இருப்பதாகவும், இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி விட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோஜோவிச் கலந்து கொள்வதில் மீண்டும் சிக்கல் உருவாகி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய விரும்பும் யாராக இருந்தாலும் தேவையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை நிச்சயம் கடைப்பிடித்தாக வேண்டும். ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தால், அதற்கான தகுதி வாய்ந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். 

அவர் ஏன் தடுப்பூசி போடவில்லை என்பதற்கு மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தகுந்த சான்றிதழை வழங்கினால் தான் ஆஸ்திரேலியாவுக்குள் மற்றவர்களுடன் இணைந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார். இந்த விஷயத்தில் ஜோகோவிச்சுக்கு என சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. மற்ற எல்லோரையும் போல் தான் அவரும் நடத்தப்படுவார். 

அவர் அளிக்கும் மருத்துவ சான்றிதழ் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாதபட்சத்தில் அவர் அடுத்த விமானத்திலேயே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்' என்றார்.


Next Story